நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ராணுவம் தொடர்பான காட்சிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சில பகுதிகள் குறித்துத் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்தது. இதன் காரணமாக, படத்தைப் பட மறு ஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், படத்திற்கு உடனடியாகச் சான்று வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டு விசாரணையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இத்தகைய சூழலில், படமானது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் பரிசீலனையில் இருக்கும்போதே, எதிர்பாராத விதமாக இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தணிக்கைச் சான்றிதழ் கூடப் பெறாத நிலையில், படம் பொதுவெளியில் கசிந்தது வணிக ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டார். சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படம் இணையத்தில் வெளியாவது சட்டவிரோதமானது என்றும், இது தயாரிப்பாளருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவிகளிலோ வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக இணையதளச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
