மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து முடிந்ததையடுத்து, திக் விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வில், அம்பு ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (28.04.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆடி வீதியில் திருக்கல்யாண மண மேடையில் எழுந்தருளினர்.

பின்னர், காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கல நானைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து, பெண்கள், தங்களது திருமாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கல்யாண வைபவம் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (29.04.2026) காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
