தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் தவெக-வுக்குச் சாதகமாக வந்துள்ளதாலும், அவர் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாலும், அவருக்கு தற்போது ‘முதலமைச்சர்’ அந்தஸ்திலான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரை முதல் பனையூர் வரையிலான சாலைகளில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
விஜய் தனது இல்லத்திலிருந்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகி வருகிறார். இதற்காக அவருக்கென பிரத்யேக ‘கான்வாய்’ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது தொண்டர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. தவெக தலைமை அலுவலகத்திலும் கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிய எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க அவர் புறப்பட உள்ளதால், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் தற்போது காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
