தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிமுகவின் ஆதரவு கிடையாது என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி, தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்று செய்தி தவறானது என்று விளக்கமளித்தார். அதிமுக மிகப் பெரிய இயக்கம் என்றும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எந்த சூழலிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்காது என்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக் கொள்வதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
