லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி வாஷிங்டனில் எட்டப்பட்டது. ஆயினும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழலில் லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் படை வீரர்கள், அங்குள்ள பொதுமக்களின் சொத்துகளை சேதப்படுத்துவது, கொள்ளையடிப்பதுமான வீடியோகள் தொடர்ந்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
வீரர்கள் தங்களின் பெருமைக்காக அவர்களே அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் லெபனானின் தபெல் நகரில் இஸ்ரேல் ராணுவ சீருடையுடன் வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,
அதே தபெல் நகரில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கன்னி மரியாளின் சிலையை அவமதிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய வீரர் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட்டை வைத்து அவமதிப்பது போன்ற காட்சிகள் அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த வீரர் அடையாளம் காணப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
