தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்தன. இதில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா கட்சி நடுநிலை வகிப்பதாக பாஜக உறுப்பினர் போஜராஜன் தெரிவித்தார். அதேவேளையில், பாமக சார்பில் உரையாற்றிய சவுமியா அன்புமணி, மதுக்கடைகளை மூடும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையைத் தாங்கள் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்காது என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தவெக-வின் தேர்தல் அறிக்கை பாமக-வின் பல வாக்குறுதிகளுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுப்பழக்கம் இல்லாத, போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதே பாமக-வின் அடிப்படை நிலைப்பாடு எனத் தெரிவித்தார். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுக்கடைகளை மூடினால் சந்துக்கடைகள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்றும், மது அரக்கனால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
நிர்வாக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்த சவுமியா அன்புமணி, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், கனிமவளக் கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசின் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை திட்டத்தை வரவேற்ற அவர், அந்தப் படைக்கென பிரத்யேகமாக ஒரு டிஜிபி-யை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உரையின் இறுதியில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து பாமக விலகிக் கொள்வதாக (Neutral/Abstain) சவுமியா அன்புமணி முறைப்படி அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் இத்தகைய ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் தனது இருக்கையில் அமர்ந்தபடி கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார்.
