திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென வெறிபிடித்த நிலையில் ஓடிவந்த தெருநாய் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை அடுத்தடுத்து ஓட ஓட விரட்டிக் கடித்துக் குதறியுள்ளது. இந்தத் திடீர் நாய் தாக்குதல் ஒட்டுமொத்த அப்பகுதி மக்களையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலில், அதிகாலையில் பணிக்குச் சென்ற நகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் உட்பட மொத்தம் 18 பேர் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 18 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு நச்சுமுறிவு ஊசிகளும், தீவிர முதலுதவிச் சிகிச்சைகளும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன.
சமூக ஆர்வலர்களின் தகவல்படி, இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் தெருநாய்க் கடிக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, குடியிருப்புப் பகுதிகளிலும் வீதிகளிலும் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்து நிலவி வருகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தத் தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
