குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, சாட்சிகளின் வாக்குமூல நகல்களை வழங்கக் கோரி முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஏற்கனவே பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழங்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ஜார்ஜின் கோரிக்கையை நிராகரித்தார். சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு சரியானது என்று கூறி மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.
அதேவேளையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா முறைகேடு வழக்கை இழுத்தடிக்காமல், அடுத்த 12 வாரங்களுக்குள் விசாரணையை முழுமையாக முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
