வேலூர் அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனை குறித்து புகாரளித்த பெண்ணை மது விற்பனையாளர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை கணேஷ் நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை (கடை எண்: 11276) இயங்கி வருகிறது.
இதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி (என்ற) குமரேசன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் முதலமைச்சராகப் பதவியேற்ற ச.ஜோசப் விஜய், பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலம் அருகே இருந்த மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதோடு, கள்ள மதுச்சந்தைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, பொன்னை கணேஷ் நகர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது குறித்து, டாஸ்மாக் கடை அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியான ரவி என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னை காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.
புகாரளித்து இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
ஆனால், சின்னப்பொண்ணுதான் புகார் அளித்தார் என்னும் தகவலை காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளே, கள்ளமது விற்பனை கும்பலுக்குக் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசனின் தம்பி சுதாகர் மே17ஆம் தேதி மாலை சின்னப்பொண்ணுவின் வீட்டிற்குள் சென்று எங்கள் மீது போலீசுக்கு தகவல் கொடுப்பாயா? என்று கேட்டு அங்கிருந்த பெண்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
சுதாகர் பெண்களைத் தாக்கி, மிரட்டல் விடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மது விற்பனை குறித்து தைரியமாகப் புகாரளித்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது மாவட்ட காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோன்று தனி பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தது கள்ளத்தனமாக மது விற்பவர்களுக்கு எப்படி தெரிந்தது எனவும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
