இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு தினம் இன்று (மே 27) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நேருவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நாளில், ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருஜிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலிகள். நவீன இந்தியாவிற்கான அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் முற்போக்கான தேசத்தை உருவாக்குவதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
சுதந்திரம், ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றில் வேரூன்றிய அவரது தொலைநோக்குத் தலைமை நமக்குப் காலெமெல்லாம் வழிகாட்டும்.”
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு மாற்று முகாம் அரசியல் தலைவர்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தங்களது மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.
நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படும் ஜவஹர்லால் நேருவின் உயர்ந்த கொள்கைகளும் சித்தாந்தங்களும், நமது நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க ஒரு கலங்கரை விளக்கமாக என்றென்றும் செயல்படும்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
