கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியின் முக்கிய குடியிருப்பு பகுதியான முத்துநகரில், பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் முத்துநகர் பகுதியில், கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைக் குழாய்களில் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பு காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே உள்ள மேன்ஹோல் வழியாகப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தச் சாக்கடை நீர் முத்துநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், ஒட்டுமொத்தப் பகுதியிலும் கடுமையான துர்நாற்றத்தில் வீசுகிறது.
சாலையெங்கும் தேங்கிக் கிடக்கும் அசுத்த நீரால் அந்த வார்டு முழுவதும் கொசுத்தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் மர்மக் காய்ச்சல் போன்ற ஆபத்தான தொற்றுநோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், இந்தச் சாக்கடை நீரால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் முதியவர்களும் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். “ஏதேனும் பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்ட பிறகுதான் அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா?” என முத்துநகர் மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நவீன எந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை முழுமையாக நீக்கி, கழிவுநீர்க் குழாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், குடியிருப்புவாசிகளின் நலனைக் கருதி இப்பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
