பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த காலகட்டத்திலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையின் இலக்கணமாகச் செயல்பட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர். குப்பையில் தவறுதலாக விழுந்த தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த அவரது மனிதநேயச் செயல் ஒட்டுமொத்த கோவை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69-ல் உள்ளது பாரதி பார்க் 4-வது வீதி. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் போது, எதிர்பாராத விதமாகத் தங்களின் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு குப்பையாக வீசியுள்ளனர்.
அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சித் தூய்மைப் பணியாளர் சக்திவேல், தான் சேகரித்த குப்பைகளைக் கையாளும் போது அதற்குள் ஏதோ மின்னுவதைக் கண்டுள்ளார். உற்றுப் பார்த்தபோது அது 3 பவுன் தங்கச் சங்கிலி என்பது தெரியவந்தது.
பேராசைப்படாமல், அந்த நகையைத் தன்வசப்படுத்திக் கொள்ளச் சற்றும் யோசிக்காத சக்திவேல், உடனடியாக அந்த நகையின் அசல் உரிமையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்கள் முன்னிலையிலேயே அந்தத் தங்கச் சங்கிலியைப் பத்திரமாக ஒப்படைத்தார். இழந்த நகை மீண்டும் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்துபோன உரிமையாளர்கள், தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தனர்.
தூய்மைப் பணியாளரின் இந்த உன்னதமான செயல் குறித்து அறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர், அவரது நேர்மையைப் பெரிதும் பாராட்டியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர் சக்திவேலுக்கு பொன்னாடை அணிவித்து, தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ஆணையர் தெரிவித்துக் கொண்டார்.
