அமெரிக்கா உடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், “எதிரியின் வெற்று வார்த்தைகளையோ அல்லது வாக்குறுதிகளையோ ஈரான் ஒருபோதும் நம்பாது” என்று ஈரானின் நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், வெறும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அமையாது என்றும், உறுதியான முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்றும் தெளிவுபடுத்தினார். ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளும், நாட்டின் நலன்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வரை அமெரிக்கா முன்வைக்கும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திற்கும் ஈரான் ஒப்புதல் அளிக்காது என்று காலிபாஃப் கூறியுள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்குவது மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விடுவிப்பது ஆகியவற்றைத் தங்களின் முக்கிய உரிமைகளாக ஈரான் கோரியுள்ளதாகவும், இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அணுசக்தி திட்டம் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்கா உடனான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை இறுதி முடிவை எட்டாமல் இழுபறியாக நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
