தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, 22 மாவட்டங்களில் இன்று (ஜூன் 2) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டி தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், தென்கிழக்கு அரபிக் கடல் அதனையொட்டி லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் மலைப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கொங்கு மற்றும் உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, வட மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 2) ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
கேரளப் பகுதிகளில் அடுத்த சில தினங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும், கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் வரை, தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மழைப் பொழிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
