தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் ஜெய்சங்கரின் 26-ஆவது நினைவு தினம் இன்று.
மக்கள் கலைஞர், மக்கள் தமிழன் என்னும் பட்டங்களுடன் திரையில் அடையாளம் காட்டப்பட்டாலும், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்னும் பெயர் இன்றளவும் ஜெய்சங்கரைத் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.
1938ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் பிறந்த ஜெய்சங்கரின் பெற்றோரின் பூர்விகம் கும்பகோணம் என்றாலும், ஜெய்சங்கர் நெல்லையில் பிறந்து சென்னையில் வளர்ந்தார்.
மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியில் பள்ளிப்படிப்பையும், புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த ஜெய்சங்கர் தனது கல்லூரி காலத்திலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தந்தையின் விருப்பத்துக்காக சட்டக்கல்லூரியில் இணைந்த போதும் ஜெய்சங்கரின் நடிப்பு தாகம் காரணமாக ஓர் ஆண்டிலேயே அதனைக் கைவிட்டுவிட்டு தனது கவனம் முழுவதையும் நடிப்பின் பக்கம் திருப்பினார்.
சோ ராமசாமி நடத்தி வந்த விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் இணைந்து சிறு சிறுவேடங்களில் நடித்து வந்த ஜெய்சங்கர் அதன்பின்னர் கூத்தபிரனின் “கல்கி ஃபைன் ஆர்ட்ஸ்” நாடகக் குழுவில் இணைந்து, கல்கியின் ‘அமர தாரா’ நாடகத்தில் நாயகனாக நடித்து முத்திரை பதித்தார்.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ஜெய்சங்கர் 1965-இல் இரவும் பகலும் என்னும் திரைப்படத்தில் ஜெய்சங்கர் என்னும் பெயரில் அறிமுகமானார். சங்கர் என்னும் இயற் பெயரோடு ஜெய் என்பதையும் இணைத்தவர் அந்தப் படத்தின் இயக்குநர் ஜோசப் தளியத் ஆவார். ஜெய்சங்கர் திரைப்படத் துறையில் முதல் அடி எடுத்து வைக்க கரம்பிடித்து அழைத்து சென்றவர் அப்போதைய முன்னணி இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா ஆவார்.

இரவும் பகலும் திரைப்படம் ஜெய்சங்கருக்கு மிகப்பெரிய பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுத் தர அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
100இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுகளைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜெய்சங்கர்.

1965இல் இரவும் பகலும் எனத் தொடங்கிய ஜெய்சங்கரின் திரைப்பட வாழ்க்கை, 1999-இல் சித்ரா லட்சுமணன் இயக்கிய சின்னராஜா படத்துடன் முற்று பெற்றது. கதாநாயகனாக 175 படங்களில் நடித்த ஜெய்சங்கர், முரட்டுக்காளை திரைப்படம் முதல் வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடத்திருக்கிறார். ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தவர்கள் 65 பேர்.
ஜெய்சங்கர் பெரும்பாலும் புலனாய்வு அம்சம் கொண்ட திரைக்கதைகளிலேயே நடித்திருந்ததால் இவருக்கு தென்னாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்னும் பட்டம், தொடர்ந்து அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில் இவரது திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்ததால் வெள்ளிக்கிழமை நாயகன் என்னும் பட்டத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வழங்கியிருந்தனர்.
1973ஆம் ஆண்டு ஜெய்சங்கருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சினிமாவைத் தாண்டிய ஜெய்சங்கரின் வாழ்க்கை அன்பும், இரக்கமும் மிக்கதாகவே இருந்துள்ளது. தனது இல்ல நிகழ்வுகளை எல்லாம், கருணை இல்லங்களிலேயே கொண்டாடியதோடு, பல்வேறு திரைக்கலைஞர்களையும் இதுபோன்ற கருணை இல்லங்களுக்கு வரவழைத்து அவர்கள் கைகளால் பல்வேறு உதவிகளையும் செய்ய வைத்துள்ளார்.
2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின்னர் இவரின் மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி நடத்தி வருகிறார்.
ஜெய்சங்கரைப் போன்ற ஆயிரக்கணக்கான நடிகர்கள் இனி வருங்காலத் திரையுலகில் வரலாம். ஆனால், அவரைப் போன்று ஒரு மனிதர் வருவாரா என்பது சந்தேகமே. ஜெய்சங்கர் அத்தகைய ஒரு அபூர்வமான மனிதர்!
