தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் முக்கிய அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அதிமுக உறுப்பினர்கள் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் முதற்கட்டமாக 25 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நான்கு கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும், அவை அனைத்தும் சட்டப்பேரவை விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணை (கட்சி தாவல் தடுப்பு சட்டம்) அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் 21 அதிமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது. அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்றும், அவர்களை மன்னிப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
இருப்பினும், , கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறப்படும் பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகியயோர் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், விசாரணைக்கு பிறகு அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்
சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக நேரலை கொடுப்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குமா என்பது குறித்து கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றும் பதிலளித்தார்.
