இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானத்தில் இன்று தொடங்கவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முழுவதும் பெய்த பலத்த மழை மற்றும் சனிக்கிழமை காலையிலும் நீடித்த தூரல் காரணமாக மைதானத்தின் முக்கிய ஆடுகளப் பகுதி முழுவதும் தார்ப்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்ற போதிலும், மைதானத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற ‘சூப்பர் சோப்பர்’ இயந்திரங்கள் தீவிரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய நாள் முழுவதும் தர்மசாலாவில் 60 முதல் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்தின் வானிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரம் குறைந்தவுடன், போட்டி தொடங்குவது குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானப் பராமரிப்பாளர்கள் ஆட்டத்தைத் தொடங்குவதற்கான சாதகமான சூழலை எதிர்நோக்கி தயார் நிலையில் உள்ளனர்.
