இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்புறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் ஜூன் 16 முதல் 17 வரை ஜி7 உச்சி மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியா, பிரேசில், உக்ரைன், தென் கொரியா, கென்யா, எகிப்து, ஐக்கிய அரசு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தநிலையில், மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16 மாத இடைவெளிக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு சிறந்த தருணமாக அமைந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா- அமெரிக்க நட்புறவில் உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால இந்தியாவில் தனது வருகையை நினைவு கூர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்காலத்தில் மீண்டும் இந்தியா வர உள்ளதாக தெரிவித்தார்.
