உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று தமது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார். 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிறந்த ராகுல் இன்று 55வது பிறந்தநாளை காண்கிறார். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) தலைவருமான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு இதயபூர்வமான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் “சகோதரர்கள்” என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்ட அவர்களது உறவு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பகிரங்கமான பிளவாக மாறியது. இந்த மாற்றம் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்தது. இதனால் திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் ஜோடோ நியாய யாத்திரை உள்ளிட்ட நீண்ட தூரப் பயணங்கள் மூலம் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திய அவர், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான குரல் எழுப்பி வருகிறார்.
இன்றைய பிறந்தநாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நெருங்கிய அரசியல் நண்பர்களுடன் ராகுல் காந்தி கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் பயணம் இன்னும் வெற்றிகரமாக அமையவும், நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
