லெபனானில் இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அமெரிக்கா, ஈரான் இடையே நிகழ்ந்த அமைதி ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படுமா என உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
லெபனானின் தெற்கு மாகாணங்களில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஜூன் 18-ம் தேதி இரவு முதல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்களும் அடங்குவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழல், சமீபத்தில் கையெழுத்தான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இன்று (ஜூன் 19) நடைபெறவிருந்த முறையான ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு, போக்குவரத்து காரணங்களைக் கூறி அமெரிக்காவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லெபனான் மீதான தாக்குதலால் ஈரானிய பிரதிநிதிகள் குழு சுவிட்சர்லாந்து செல்வதைத் தாமதப்படுத்துவதே இந்தத் தள்ளி வைப்பிற்கு உண்மையான காரணம் எனக் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற மோதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உருவாகியுள்ள இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
