தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் பெரும் வெற்றியுடனும் விளங்க வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவதிலும் நான் எப்போதும் உங்களுடன் உறுதியாக நிற்பேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தொடரட்டும்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் விளங்கவும், உங்களது பொதுவாழ்வில் ஒரு சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலம் அமையவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது வாழ்த்து செய்தியில், மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் விஜய் ஜோசப் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தமிழக மக்களுக்குச் தொடர்ந்து சேவையாற்ற அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தொடர் வெற்றிகளுடனும் விளங்க வாழ்த்துகிறேன்.
அவரது தலைமையின் கீழ், தமிழ்நாட்டின் மற்றும் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டணி தர்மத்தின் மாண்புகளும், வலுவான கூட்டணிக் உறவுகளும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் நீண்ட ஆயுளுடனும், இன்னும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய பொதுச் சேவையிலும் ஈடுபட இறைவனை வேண்டுகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறக்க விழைகிறேன்.
நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்து செய்தியில், இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் பக்கத்தில், மாண்புமிகு முதல்வர் அவர்களே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ் நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
