டென்மார்க்கின் ஃபானோ (Fano) தீவில் உலகப் புகழ்பெற்ற சர்வதேச பட்டத் திருவிழா சமீபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஆண்டுதோறும் ஜூன் மாத நடுப்பகுதியில் நடைபெறும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு ஜூன் 19 முதல் ஜூன் 22 வரை நடைபெற்றது.
இந்த விழாவின் போது, ஃபானோ தீவின் கடற்கரைக்கு மேலே உள்ள வானம் முழுவதும் விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் பறந்த பட்டங்களால் நிரம்பி வழிந்தது. பிரம்மாண்டமான டிராகன்கள், ராட்சத திமிங்கிலங்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் பெரிய ஆக்டோபஸ்கள் போன்ற வடிவங்களிலான பட்டங்கள் காற்றில் மிதந்து பார்வையாளர்களைக் கட்டிப்போட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பட்டங்கள் டென்மார்க் வானை ஆக்கிரமித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
https://x.com/Reuters/status/2069130801015328818?
உலகின் மிகப்பெரிய பட்டத் திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விழாவில், சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பட்டப் பிரியர்கள் மற்றும் கைவினைஞர்கள் கலந்து கொண்டனர். தங்களின் தனித்துவமான பட்டப் பறக்கும் திறன்களையும், சுயசிந்தனையில் உருவான புதுமையான பட்ட வடிவமைப்புகளையும் அவர்கள் உலகிற்கு வெளிப்படுத்தினர்.
கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடும் இந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகின்றன. “ஒரு சிறிய தீவு இத்தனை நாடுகளைத் தன் பக்கம் ஈர்த்திருப்பது வியக்கத்தக்கது” எனப் பலரும் இணையத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
