23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் அட்லாண்டா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30மணிக்கு நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஹைதி அணிகள் மோதின.
போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி அணிக்காக, யாசின் பவ்னவ் முதல் கோலை அடித்ததால், 1-0 புள்ளி கணக்கில் ஹைதி அணி முன்னிலை வகித்தது. அதன்பின்னர் மொராக்கோ வீரர் அச்ரப் ஹகீமி 39வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இதனால் போட்டி சமனானது.
தொடர்ந்து 43-வது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் 2-வது கோலை அடிக்க, ஹைதி அணியின் கை ஓங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய மொராக்கோ அணியின் இஸ்மாயில் சாய்பாரி 46வது நிமிடத்திலும், சவுபியான் ரகீமி 78வது நிமிடத்திலும், கெஸ்சிம் யாசின் 89வது நிமிடத்திலும் கோல் அடிக்க, மொராக்கோ அணியின் கோல் கணக்கு 4 ஆக உயர்ந்தது. எவ்வளவோ முயன்றும் ஹைதி அணியால் கோல்கள் அடிக்க முடியாமல் போனது.
இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ அணி.
