கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தாங்கிப் பிடித்த தூண்களாகவும், லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க இளைஞர்களின் ‘வெள்ளைக்கலர்’ (White-collar) வேலைவாய்ப்புக் கனவாகவும் திகழ்ந்தது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை.
உலகளாவிய நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கி, இந்தியாவின் முகவரியை மாற்றிய இந்தத் துறை, தற்போது ஒரு மாபெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. அந்த சவாலின் பெயர் – செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI).
இந்திய ஐடி வளர்ச்சியின் பின்னணி
1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் இணையப் புரட்சி உலகையே மாற்றியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யத் தொடங்கின.
ஆங்கில அறிவு, தொழில்நுட்ப திறன், குறைந்த சம்பளச் செலவு ஆகியவை இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என உலகின் பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் மென்பொருள் பராமரிப்பு, தரவு நிர்வாகம், வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டன. இதன் மூலம் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே போன்ற நகரங்கள் உலகளாவிய ஐடி மையங்களாக உருவெடுத்தன.
அச்சுறுத்தலாக மாறிய AI
இந்த நிலையில், இந்திய ஐடி துறைக்கு ஏஐ-யின் வருகை, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வருவாய் முறை “மனித நேரத்தை” (Billable Hours) விற்பனை செய்வதுதான். ஒரு மென்பொருள் பொறியாளர் அல்லது டெவலப்பர் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பணம் செலவிடுகிறார் என்பதே வருவாயின் அடிப்படை. ஆனால் AI, இந்த மாதிரியை நேரடியாக தாக்குகிறது.
இன்று OpenAI, Google, Anthropic போன்ற நிறுவனங்களின் AI கருவிகள் குறியீடு எழுதுதல், பிழை திருத்துதல், தரவு பகுப்பாய்வு, வாடிக்கையாளர் ஆதரவு, ஆவண உருவாக்கம் போன்ற பணிகளை மனிதர்களைவிட வேகமாகவும் குறைந்த செலவிலும் செய்து வருகின்றன.
ஒரு நடுத்தர மென்பொருள் பொறியாளரின் வாரச் சம்பளத்திற்கு இணையான தொகையில், ஒரு மேம்பட்ட AI ஏஜென்டை பல நாட்கள் இயக்க முடிகிறது. இதனால் நிறுவனங்கள் மனிதர்களை விட AI-ஐத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.

20% வேலைகள் குறைந்தாலே பாதிப்புதான்
AI அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் பறித்துவிட வேண்டிய அவசியமில்லை. வெறும் 15 முதல் 20 சதவீத வேலைகள் குறைந்தால்கூட இந்திய ஐடி துறையின் தற்போதைய வணிக மாதிரி பெரும் பாதிப்பை சந்திக்கும். ஏற்கனவே பல நிறுவனங்கள் புதிய பணியாளர்கள் நியமனத்தை குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் அமைதியாக பணியாளர்களை வெளியேற்றியும் வருகின்றன. இதன் தாக்கம் ஐடி துறையில் மட்டுமல்ல; வீட்டு கடன், வாகனக் கடன், கல்விச் செலவு, நுகர்வோர் சந்தை என முழு நடுத்தர வர்க்க பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியது.
சவாலை சமாளிக்க தீவிரம்
எனினும் இந்திய ஐடி நிறுவனங்கள் கைகளை கட்டிக்கொண்டு அமரவில்லை. AI-ஐ எதிரியாக பார்க்காமல், அதனை வாடிக்கையாளர்களின் தொழில்களில் ஒருங்கிணைக்கும் ஆலோசனை சேவைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஒரு வங்கியில் AI எப்படி பயன்படுத்தப்பட வேண்டும்? மருத்துவமனையில் எந்த AI அமைப்பு பொருத்தமானது? நிறுவன தரவுகளை பாதுகாப்பாக AI-யுடன் இணைப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் புதிய சந்தையை உருவாக்க முயல்கின்றன. அதாவது, “கோடிங் செய்வது” என்பதிலிருந்து “AI-யை நிர்வகிப்பது” என்ற புதிய பாதைக்கு மாற முயற்சிக்கின்றன.
எதிர்காலம் என்னவாகும்?
இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளாக நடுத்தர வர்க்க வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக ஐடி துறை செயல்பட்டது. மாதச் சம்பளம், வீடு வாங்கும் திறன், குழந்தைகளின் கல்வி, நகர்ப்புற நுகர்வு ஆகிய அனைத்திற்கும் ஐடி ஊழியர்கள் முக்கிய பங்காற்றினர். இந்த நிலையில், 1990-களில் இணையப் புரட்சியை பயன்படுத்தி உலகை ஆச்சரியப்படுத்திய இந்திய ஐடி துறை, இன்று AI புரட்சியிலும் தன்னை மறுபடியும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நம்பிக்கை அளிக்கும் ஜாம்பவான்கள்
இருப்பினும், இந்த ஏஐ தொழில்நுட்ப அதிர்வலைகளுக்கு மத்தியில் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநர் கே. கிருதிவாசன், ஏஐ வருகையை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்க வேண்டியதில்லை என்று அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தால் ஐடி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்றும், மாறாக ஊழியர்களின் உற்பத்தித்திறன் (Productivity) கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இதனால் நிறுவனங்களுக்கு அதிகப்படியான திறமையான மனிதவளத் தேவை அதிகரிக்குமே தவிர, ஆட்குறைப்புக்கு வழிவகுக்காது என்றும், தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய சவால்களைக் கொண்டு வந்தாலும் மனிதர்களின் தேவையை ஏஐ முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதால் ஊழியர்கள் தங்களைத் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொண்டால் வேலைவாய்ப்பு அச்சுறுத்தல் என்பது இருக்காது என்றும் அவர் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
இதை ஊழியர்களும் பின்பற்றினால், இந்திய ஐடி துறை, தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்திக்கொள்ளலாம்.
-பா. முகிலன்
