23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 69வது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவும், போர்ச்சுகல் அணியும் இன்று காலை 5 மணிக்கு மியாமியில் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற தவறின. மேலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-வது பாதியிலும் முதல் கோலை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் வீரர்களின் உறுதியான தற்காப்பும் கோல் கீப்பர்களின் அபாரமான சேவ்-களால் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோலும் அடிக்காதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
