பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.R.தங்கப்பாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
