பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கி பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சுண்டக்கா பாளையம் பகுதியில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வரும் தகவலில் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலப் பதிவெண் கொண்ட இரண்டு சொகுசு கார்கள் விரைந்து வந்ததை தடுத்து நிறுத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தணிக்கை செய்தபோது, அதில் 500 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் , விமல்பாக் மற்றும் கூல்லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டைகளில் இருந்ததைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து, செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும், அவர்கள் யாருக்காக இவற்றைக் கடத்தி வந்தனர் என்பது குறித்தும் செங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
