அரசு நிர்ணயித்துள்ளக் கட்டணத்தை விட கூடுதலாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்கள் குவிந்து வருவதாக, மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில் 4 ஆண்டுகள் 6 மாதத்திற்கு மட்டுமே படிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம், பல்வேறு தனியார் கல்லூரிகள் 5 ஆண்டுகள் 6 மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு குற்றச்சாட்டு வந்திருப்பதாகவும், இதுதொடர்பாக, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை என எச்சரித்துள்ளதோடு, விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை இணையதளத்தில் முறையாக சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகள் வெளியிட வேண்டும் எனவும், , மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
