ஹியூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான (ரவுண்ட் 32) ஜப்பானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 88 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் பாதியிலேயே பின்தங்கியிருந்து கம்பேக் கொடுத்து பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை பெற்று பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்ட ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, கேஸமிரோ அடித்த கோல் மூலம் சமநிலை எட்டியது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி 30 வினாடிகளில் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு அற்புதமான கோலை அடித்து பிரேசிலுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் ஜப்பான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
1986-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11-வது முறையாக உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு பிரேசில் முன்னேறியுள்ளது. 1938-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பின்தங்கியிருந்து வெற்றி பெற்ற பிறகு, தற்போது 88 ஆண்டுகள் கழித்து நாக்-அவுட் சுற்றில் பாதியில் பின்தங்கியிருந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் 16 முறை பின்தங்கியிருந்து வெற்றி பெற்ற அணியாக ஜெர்மனியின் சாதனையை பிரேசில் தற்போது சமன் செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆஃப் 16’-க்குத் தகுதி பெற்றுள்ள பிரேசில் அணி, இன்று நடைபெறவுள்ள ஐவரி கோஸ்ட் மற்றும் நார்வே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.
