ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, ஜெர்மனியின் பெர்லின் நகரில் விசித்திரமான மற்றும் பயனுள்ள முன்னெடுப்பை அந்நாட்டு போலீசார் கையில் எடுத்துள்ளனர். பொதுவாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீர் பீரங்கிகளை தற்போது வெயிலில் தவிக்கும் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குளிர்விக்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 40°C-க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், பிராண்டன்பர்க் கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த நீர் பீரங்கிகள் மூலம் மெல்லிய நீர்த் தெளிப்பு நடத்தப்படுவது வைரலாகி வருகிறது.
https://x.com/Rainmaker1973/status/2071283413911265701?
இதய நிபுணர்கள் மற்றும் காலநிலை ஆரோக்கிய நிபுணர்கள், இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். “மனித உடல் வியர்வை மூலம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்கிறது. நீர் பீரங்கி மூலம் தெளிக்கப்படும் நீர், உடலில் பட்டு ஆவியாகும்போது, அது தோலின் வெப்பத்தை குறைத்து, இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது” என்று ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளி நிபுணர் டாக்டர் ரெனீ சலாஸ் விளக்குகிறார். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கிறது.
இருப்பினும், இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். “நீர் தெளிப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும், ஆனால் அது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் கடும் வெப்ப பாதிப்புக்கு மாற்றல்ல. ஒருவருக்கு மயக்கம், குழப்பம் அல்லது அதிக இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், அவருக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் நீர்ச்சத்து அவசியம். வெறும் நீர்த் தெளிப்பு மட்டும் அவரது உயிரைக் காப்பாற்றாது” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ், இத்தாலி, போலந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மிஸ்டிங் நிலையங்கள் (Misting stations), நீர் திரைகள் மற்றும் தற்காலிக நீரூற்றுகள் போன்ற “குளிர்ச்சி உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.
வெப்பம் 45°C-ஐத் தாண்டும் இந்திய நகரங்களைப் பொறுத்தவரை, இத்தகைய முன்னெடுப்புகள் எதிர்காலத்தில் அவசியமான ஒன்றாக மாறலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நீரைச் சரியாகப் பயன்படுத்தினால், உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்பிற்கு அது மிகப்பெரிய உதவியாக அமையும் என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.
