ஆழ்துளை கிணற்றில் விலங்குகளும், சிறுவர்களும் விழுவதும் அவர்களை மீட்பதற்கு நடத்தப்படும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கிராமப்புறங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றுகளை மூடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நிர்வைர் என்ற நான்கு வயது சிறுவன் நேற்று காலை தனது தாத்தா மற்றும் தந்தையுடன் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா வேலை செய்துகொண்டிருக்க நிர்வைரின் தந்தை தான் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆள்துளை கிணற்றில் மண் சரிந்து விழுந்துள்ளான். சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அவனது தாத்தாவும், தந்தையும் ஓடிவந்து பார்த்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுவனை மேலே கொண்டுவர முடியவில்லை.
பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர் அதிகாரிகள். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் மீட்புக் குழுக்கள் விரிவான மீட்புப் பணியை தொடங்கின. 21 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 9 அங்குல விட்டமுள்ள இந்த ஆழ்துளைக் கிணறு 220 அடி ஆழம் கொண்டுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
மேலும் ஆழ்துளைக்கிணறை திறந்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
