தீய சக்தி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது சரியா? என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 10,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளனர். இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்கள் ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புதிய கட்சியில் இணைந்து உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
விழாவில் உரையாற்றிய சி.விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தலைமையை வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க மறுத்துவிட்டு, தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது சரியானதா? தீய சக்தியாகக் கருதப்படும் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முதலமைச்சர் விஜய்” என்ற உறுதியான இலக்கை நோக்கி தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம் என்று வலியுறுத்தினார். இன்றைய இணைப்பு விழா வெறும் டிரெய்லர் மட்டுமே என்றும், டெல்டா பகுதியில் நடைபெறவிருக்கும் பெரிய இணைப்பு விழா தான் மெயின் பிக்சர் என்றும் அவர் உரத்த குரலில் கூறினார். மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பலர் த.வெ.க.வில் இணைந்து வருவதாகவும், பழையன கழிந்து புதியன புகுந்துள்ளதால் இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
“முதலமைச்சரிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள், டெல்டா பகுதியில் மிகப் பெரிய இணைப்பு விழாவை நடத்திக் காட்டுவோம்” என்று அவர் அழைப்பு விடுத்தார். மேலும், காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவோம், ஜல்லிக்கட்டுக்கு துணை நின்று அதன் பாரம்பரியத்தை காக்க முன்வருவோம் என்றும் உறுதியளித்தார்.
இந்த இணைப்பு விழா த.வெ.க.வின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி மோதல்களால் அதிருப்தியடைந்த பல முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வை நோக்கி நகர்வது அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
