சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் சுமார் 15 ஆயிரம் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு, கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் சகோதரர்களின் இணைப்பு, த.வெ.க.வுக்கு புதிய வலு சேர்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “அரசியல் களத்தில் புயலாக உருவெடுத்து, ஆட்சியமைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று பாராட்டினார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததா அல்லது மாற்று வழியைத் தேர்வு செய்வதா என யோசித்ததாகவும், இறுதியில் த.வெ.க.வில் இணைய முடிவு செய்ததாகவும் அவர் விளக்கினார்.
“பணத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் மக்களின் உண்மையான ஆதரவு இல்லாமல் எந்த ஆட்சியும் நிலைக்காது” என்று குறிப்பிட்டார்.மேலும், “42 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராகவும், 25 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டவருமான நான், கட்சியின் தற்போதைய நிலையை உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. ஒரு தலைவர் சரியான முடிவெடுக்கத் தவறினால் அந்த இயக்கம் என்ன ஆகும் என்பதற்கு அதிமுகவே சிறந்த உதாரணம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
“தொண்டன் ஒருவர் கொடியைப் பிடித்தால்தான் தலைவர் கொடியேற்ற முடியும். அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பு இல்லாமல் எந்தக் கட்சியும் வளர முடியாது” என்று வலியுறுத்திய விஜயபாஸ்கர், த.வெ.க.வின் கொள்கைகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.இந்த இணைப்பு விழா, தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
