திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி.மேட்டூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சின்னத்தம்பி. இவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். நீண்ட நாட்களாக இவர் அலுவலகப் பணிகளை முறையாகக் கவனிக்காமல், இரவு நேரங்களில் அலுவலகத்திலேயே மது அருந்திவிட்டுத் தங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வி.ஏ.ஓ சின்னத்தம்பி, அரசு அலுவலகத்திலேயே மேலாடை இன்றி அரை நிர்வாண நிலையில் படுத்திருந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அரசு அலுவலகத்தில் இப்படியொரு அநாகரிகச் செயல் நடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தச் சூழலை வீடியோவாகப் பதிவு செய்த பொதுமக்கள், “அரசு அதிகாரியாக இருந்து கொண்டு அலுவலகத்தில் இப்படி அரை நிர்வாணமாகப் படுத்திருக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினர். இதைக் கண்டு பதறிப்போன சின்னத்தம்பி, பொதுமக்களிடம் கெஞ்சுவதும், புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று மன்றாடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தமிழக துணை சபாநாயகரின் தொகுதியிலேயே அரசு அதிகாரியின் இத்தகைய பொறுப்பற்ற செயல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மக்கள் பணி செய்ய வேண்டிய அரசு அதிகாரி ஒருவரே அலுவலகத்தையே மது அருந்தும் இடமாக மாற்றியிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
