கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கத்திற்கான அரசு முறை இறுதிச்சடங்குகள் இன்று முறைப்படி தொடங்கின. தலைநகர் தெஹ்ரானில் தொடங்கியுள்ள இந்த நிகழ்வு, வரும் ஜூலை 9-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று தெஹ்ரானின் ‘மொசல்லா பெரிய மசூதியில்’ பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கமேனியின் உடல், ஜூலை 6-ம் தேதி நகரின் மையப்பகுதியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஊர்வலமாக மாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 7-ல் ஈரானின் ஆன்மீகத் தலைநகரான ‘கோம்’ நகரத்திற்கும், ஜூலை 8-ல் ஈராக்கின் ‘கர்பலா’ புனித நகரத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யப்படவுள்ளன. இறுதியாக, ஜூலை 9-ம் தேதி ‘மஷ்ஹத்’ நகரில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், பிப்ரவரி மாதத் தாக்குதலில் காயமடைந்த அவர், தற்போது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்ளார். மொசாட் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் அபாயம் நீடிப்பதால், தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் மொஜ்தபா கமேனி நேரடியாகப் பங்கேற்க மாட்டார் என்று இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதி அயத்துல்லா ஹக்கீம் இலாஹி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு கருதி அவர் ரகசியப் பதுங்கு குழியில் இருந்தபடியே நாட்டை வழிநடத்துவார் எனத் தெரிகிறது. மறுபுறம், சுவிட்சர்லாந்தில் சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஈரானின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளைத் தெஹ்ரான் நகராட்சி போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.
