தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தவெக அரசு ஆட்சியில் அமர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. அக்கட்சி தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம் போன்றவை எல்லாம் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்து வெளியிலிருந்து ஆதரவு தருவதாக விசிக தெரிவித்தது. அதனை தொடர்ந்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்ற அறிவித்தப்படியே விசிகவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைத்தது. வன்னியரசு அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்தநிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில், விசிக மாவட்டச் செயலாளர் சாமுராய்குரு தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், வெற்றி பெற்று தவெக அரசில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும், திருமாவளவன் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என முன்பே தெரிவித்திருந்தாலும், தொண்டர்களின் இந்தத் தீர்மானம் அவருக்குப் பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
