கிருஷ்ணகிரி: அதிமுக மற்றும் தவெக இணையும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, இனியும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் இருந்த ஜாம்பவான்கள் எல்லாம் தவெகவுக்கு சென்று விட்டார்கள், அதிமுகவில் தற்போது லெட்டர் பேட் மட்டுமே உள்ளது” என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலளித்தார்.
“அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள் தான்.தொண்டர்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்த விஜய் பாஸ்கர்கள்.இவர்கள் ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள். ஜாம்பவான்கள் முழுவதும் அதிமுகவில் உள்ளனர். லெட்டர் பேடு வைத்து ஏமாற்றியவர்கள் மட்டுமே தவெகவுக்கு ஓடி உள்ளனர்” என்றார்.
மேலும், “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான், எதிர்காலத்தில் இணையும் என்று ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார். அவருக்கு நான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கிறேன். இரண்டு ஆண்டுகளில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக, தற்போது தவெக என பல கட்சிகளை மாற்றியுள்ள அவருக்கு எந்தக் கொள்கையும் இல்லை. அதிமுக தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து பல அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கிய இயக்கம் அதிமுக. எனவே அதிமுக-தவெக இணைப்பு குறித்து இனியும் தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு குதிரைப் பேர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியதுடன், ஆளுநரிடம் மனு அளிப்பதில் தவறு இல்லை என்றும் கூறினார். மேலும், எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு தவறுகளை செய்து வருவதாகவும் கே.பி.முனுசாமி விமர்சித்தார்.
