தற்போது வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் அனைவரும் தங்களது மொபைல் எண்ணை பகிர்ந்தே தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ‘Username’ வசதி அமலுக்கு வந்தால், மொபைல் எண்ணை பகிராமல் பயனர்பெயர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
இந்த அம்சம் இணைய மோசடி, ஆள்மாறாட்டம், ஃபிஷிங், டிஜிட்டல் கைது (Digital Arrest) போன்ற சைபர் குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், கடந்த வாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கும் விளக்கம் கேட்கப்பட்டது.
முதலில் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரிய வாட்ஸ்அப்புக்கு தற்போது மேலும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மெட்டா நிறுவன அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த புதிய வசதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், பிரபலங்கள், அரசு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய கணக்குகளின் பெயர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளது.
மேலும், பயனர்பெயர் மூலம் முதன்முறையாக வரும் தகவல்களுக்கு பல்வேறு பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் மோசடி தடுப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், அரசுடன் நடைபெறும் ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, Telegram மற்றும் Signal தளங்களின் Username வசதி குறித்தும் மத்திய அரசு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
