தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்த காதல் ஜோடியின் பெற்றோர், போலீசார் முன்னிலையில் காலில் விழுந்து கண்ணீர் மல்க சமாதானம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாஷாவும், அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த போலீசார், இரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, மகளும் மருமகனும் தங்களுடன் வீட்டிற்கு வர வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிய காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இரு தரப்பினரிடமும் போலீசார் நீண்ட நேரம் பேசி சமரசம் ஏற்படுத்தினர். இறுதியில், காதல் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டு, தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர், காதல் ஜோடி பெற்றோருடன் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
