கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மரங்கள், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மொத்தம் 60 வீரர்களைக் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டன.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்பது, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்வது, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற மீட்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகிய பணிகளில் NDRF குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
