குஷி தமிழ் சினிமா பாணியில் லியோனல் மெஸ்சி வாழ்க்கையில் நடந்து வரும் அந்த சம்பவம் மெஸ்சி ரசிகர்களை உணர்ச்சிப் பூர்வமாக்கி உள்ளது.
இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த குஷி திரைப்படத்தில், பச்சிளம் குழந்தையாக இருக்கும் விஜய்யும், ஜோதிகாவும் தங்கள் விரல்களால் ஒருவரையொருவர் தொடுவார்கள். அதனைத் தொடர்ந்து இவர்கள் எப்படி வளர்ந்து பெரியவர்களாகி ஜோடி சேர்கிறார்கள் என்பதை திரைக்கதையாக விவரித்திருப்பார்கள்.
அப்படி ஒரு சம்பவம் கால்பந்தாட்ட சாம்பியன் லியோனல் மெஸ்சி வாழ்வில் நடந்து வருவது அவரது ரசிகர்களை வியப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
அந்த சம்பவம் நடந்தது கடந்த 2007ஆம் ஆண்டுதான். பார்சிலோனாவில் நடைபெற்ற யுனிசெஃப் தொண்டு நிறுவனத்துக்கான காலண்டர் புகைப்படப் படப்பிடிப்பில், அப்போது 20 வயதாக இருந்த லியோனல் மெஸ்சி ஒரு குழந்தையைக் குளிப்பாட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் கால ஓட்டத்தில் அந்த வியப்பு சம்பவம் நடந்திருக்கிறது. ஆம், அப்போது லியோனல் மெஸ்சியால் குளிப்பாட்டப் பட்ட அந்தக் குழந்தைதான் லமின் யமால் என்பதும் அவர் தற்போது ஸ்பெயின் கால்பந்தின் நட்சத்திர வீரராக உருவெடுத்திருப்பதும்தான் அந்த வியப்பு சம்பவம்.
இது தொடர்பான புகைப்படங்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மீண்டு வைரலானதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையே யமால்தான் என்பது பரவலாக அறியப்பட்டது.

இப்போது மீண்டும் அந்தப் புகைப்படம் வைராகி வரும் நிலையில்தான் புதிய ட்விஸ்ட் கிளம்பியுள்ளது. அது 19 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே குழந்தை FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்சிக்கு எதிராக நிற்கலாம் என்பதுதான் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இது ஒரு எதிர்பார்ப்புதான் என்றும், போட்டி அட்டவணை மட்டும் இரு அணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இது நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
