கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (33) சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டிக்கடை நடத்தி வந்த அவர், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி தென் தாமரைகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 9-ம் தேதி அவரது கடையில் நடத்திய சோதனையில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது அவருக்கு மூன்றாவது முறை என்பதால் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைதுக்குப் பிறகு 13-ம் தேதி காலை சபரிவர்மன் சிறையில் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
உடலைப் பார்வையிட்ட மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள், சபரிவர்மனை போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினர். “நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்” எனக் கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் உறவினர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். சிறைக்குச் சென்று வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் விசாரித்தார்.
குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் சிறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பிரேதப் பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது கொலை என்பதை உறுதிப்படுத்தியது. விசாரணையில், 12-ம் தேதி இரவு சபரிவர்மனுக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் அவரை கை கால்களைக் கட்டி வைத்து வார்டர்கள் மற்றும் கைதிகள் சேர்ந்து தாக்கியதாகவும் தெரியவந்தது. தாக்குதலில் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டர் திருமலை நம்பி, வார்டர்கள் ஜெகன், சிவகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சபரிவர்மனைத் தாக்கியதாகக் கூறப்படும் விஷ்ணு (21, மார்த்தாண்டம்), சாரதி (19), ஜெகன் (40, குலசேகரம்), சரத், பெருமாள் (நெல்லை), சேதுராம் (30), அரவிந்த் (27), அஜித் (29, கொட்டாரம்) உள்ளிட்ட எட்டு கைதிகளும் கைது செய்யப்பட்டனர்.
சபரிவர்மனின் குடும்பம் அவரது மரணத்துக்கு நீதி கோரியதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தென் தாமரைகுளம் காவல் நிலைய எஸ்.ஐ.யை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
