மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு நாளை முதல் ஆன்லைன் ‘சுய கணக்கெடுப்பு’ தொடங்க உள்ளது.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கான முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணையவழியில் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ நாளை (ஜூலை 17) முதல் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்களின் விவரங்களை ஜூலை 31-ம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம். இதில், மொத்தம் 33 கேள்விகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, குடும்பக் கட்டமைப்பைக் கண்டறியும் வகையில் “குடும்பத்தில் உள்ள தம்பதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?” என்பது உள்ளிட்ட முக்கியக் கேள்விகள் இதில் கேட்கப்படவுள்ளன.
ஆன்லைன் வழிப் பதிவு என்பது கட்டாயமில்லை என்றும் அது பொதுமக்களின் வசதிக்காக மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அரசு நியமித்துள்ள கணக்கெடுப்பு அலுவலர்கள் நேரடியாகப் பொதுமக்களின் வீடுகளுக்கே வந்து விவரங்களைச் சேகரிக்க உள்ளனர்.
ஆன்லைனில் ஏற்கனவே விவரங்களைப் பதிவு செய்தவர்கள், தங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ‘சுய கணக்கெடுப்பு எண்‘-ஐ மட்டும் நேரில் வரும் அலுவலர்களிடம் காண்பித்து விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணக்கெடுப்புப் பணி எளிதாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
