பாமகவின் வாக்கு வங்கி கடுமையாக சரிந்துள்ளதாகவும், இனி அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்க முடியாது என்றும் பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.
சேலம் சூரமங்கலத்தில் அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அருள், 1989-ஆம் ஆண்டு முதல் 2025 வரை கட்சியின் வளர்ச்சிக்காக முழுமையாக உழைத்ததாகவும், 18 முறை சிறை சென்றதுடன், குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 21 சதவீத இடஒதுக்கீட்டு போராட்ட தியாகி குப்புசாமி குடும்பத்துக்கு தனது சொந்த செலவில் ரூ.18 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுத்து, அதை அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்ததையும் நினைவுகூர்ந்தார்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, தாம் அன்புமணியின் பக்கமே உறுதியாக நின்றதாகக் கூறிய அவர், தற்போது தன்னை “துரோகி”, “சாக்கடை” என விமர்சிப்பதாக வேதனை தெரிவித்தார்.
“அன்று இருந்த அன்புமணி வேறு; இன்று இருக்கும் அன்புமணி வேறு” என்று கூறிய அருள், உண்மையாக உழைத்த நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு, தற்போது தந்தை-மகன் மீண்டும் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.பாமகவின் வாக்கு வங்கி முன்பு 5.86 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2.18 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த வீழ்ச்சிக்கு அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் எடுத்த அரசியல் முடிவுகளே காரணம் என்றார்.

“இனிமேல் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்க முடியாது. வன்னிய சமுதாயத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்தும் அந்தக் குடும்பத்துக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை” என்றும் அவர் விமர்சித்தார்.
இதையடுத்து பேசிய பாமக மூத்த ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான சதாசிவம், “இன்றைய தேதியிலிருந்து பாமக இரண்டாக உடைந்துவிட்டது. உண்மையான பாமக இங்குதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு அரசியல் பாதையைத் தேர்வு செய்வதா என்பது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆடி மாதம் முடிந்த பிறகு ஆவணி மாதத்தில் அடுத்தகட்ட அரசியல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அருள் தெரிவித்தார்.
