மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது விவரங்களை இணையவழியில் பதிவு செய்து, மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் அடிப்படையாக அமையும்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பமும் தங்களது விவரங்களை உண்மைத்தன்மையுடன் பதிவு செய்ய வேண்டும் என்றும், இணையவழி சுய கணக்கெடுப்பு வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நானும் சுய கணக்கெடுப்பு முறையில் எனது விவரங்களை பதிவு செய்துள்ளேன். அதுபோல அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்பதால் எந்தவித தயக்கமும் இன்றி கணக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்“மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றுவோம்” எனக் கூறிய முதலமைச்சர், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடும்பமும் இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
