புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, 15,000 பயன் தரும் நாட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாநில தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து, மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், பூங்காக்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு முதல் மரக்கன்றை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேம்பு, புங்கை, நாவல், நீர்மருது போன்ற நிழல் தரும் மற்றும் பயன் தரும் நாட்டு மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மொத்தமாக 15,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் கட்டமாக 600 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அருளரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், நகர அலுவலர் காயத்ரி, வனச்சரக அலுவலர் ராஜேந்திரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் காந்திமதி, மாநகர சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
