இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகை சிறப்பு வெளியீட்டுக்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்தது. பின்னர், வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், சமீபத்தில் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். “திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து, விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். தியேட்டர்களை வண்ண விளக்குகள், பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் பூக்களால் அலங்கரித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
விஜயின் 69வது படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ அரசியல், சமூகம் சார்ந்த கதையம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச். வினோத்தின் முந்தைய படங்களான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘சதுரங்கவேட்டை’ போன்றவை வெற்றி பெற்றதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெளியீடு பெரும் கொண்டாட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவினர் இதனை அரசியல் ரீதியாகவும் பயன்படுத்தி, தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
