முதலமைச்சர் விஜய் ஆட்சியில்ல் பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்கி வருவதாக தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சிவகாசியின் எதிர்காலம் என்பது தொழில் வளர்ச்சியுடன் மட்டுமல்ல, பாதுகாப்பான மற்றும் உலகத் தரத்திலான சுகாதார கட்டமைப்புடனும் இணைந்திருக்க வேண்டும்.
இதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், Comprehensive Firecracker Accident Management System தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம், சிவகாசி – விருதுநகர் – மதுரை ஆகிய நகரங்களை ஒருங்கிணைக்கும் பிராந்திய தீக்காய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ வலையமைப்பை உருவாக்குவது எங்கள் நோக்கம் எனவும்,
விபத்து நடைபெறும் தருணத்திலிருந்து அவசர சிகிச்சை, மேம்பட்ட தீக்காய சிகிச்சை, மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (Reconstructive Surgery), புனர்வாழ்வு மற்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பு வரை ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை உருவாக்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பட்டாசுத் தொழிலில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரைவான, தரமான மற்றும் நவீன மருத்துவ சேவையை உறுதி செய்வதோடு, சிவகாசியை தொழில் பாதுகாப்பு மற்றும் அவசர சுகாதார மேலாண்மையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக மாற்றுவதே எங்கள் இலக்கு எனக் கூறியுள்ள அமைச்சர் கீர்த்தனா,
ஒரு நகரத்தை நிர்வகிப்பது என்பது சாலைகள் மற்றும் கட்டிடங்களை உருவாக்குவது மட்டுமல்ல; மக்களின் உயிரையும், நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதும் ஆகும். அதற்கான பயணத்தில், நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு பாதுகாப்பான, நவீனமான சிவகாசியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
