இந்திய ஹஜ் குழு சார்பில் 2027-ம் ஆண்டுக்கான (ஹிஜிரி 1448) புனித ஹஜ் பயணத்திற்குச் செல்ல விரும்பும் ஆன்மிகப் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில ஹஜ் குழுக்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 24, 2026 (இரவு 11:59 மணி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு எந்தச் சூழ்நிலையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
விருப்பமுள்ள பயணிகள் hajcommittee.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது HAJ SUVIDHA செயலி (App) மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்ப அவகாசம் முடிந்ததும், ஜூலை 30, 2026 அன்று காலை 11:00 மணிக்கு கணினி மூலம் குலுக்கல் முறை தேர்வு நடைபெறும். இந்த நிகழ்வு இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் நேரலை (Live stream) செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு, விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அறியத் தரப்படும். குலுக்கலில் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் அனைவரும் முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300/-ஐ ஆகஸ்ட் 10, 2026-க்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
