சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலங்குடி கிராமம் கணபதி அம்பலம் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி முருகன். இவரது மனைவி கோமதியும், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளரான கவிதாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இந்த நட்பைப் பயன்படுத்தி, கவிதா தனது கடைக்கு வர வேண்டிய பொதுமக்களுக்கான ரேஷன் பொருட்களை நேரடியாக லாரி மூலம் கொண்டுவந்து கோமதியின் வீட்டில் இறக்கி வந்துள்ளார்.
இதுகுறித்து இரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பள்ளத்தூர் காவல்துறையினர் கோமதியின் வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது, தலா 50 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகளில் மொத்தம் 2,400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த அரிசி மூடைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், அரிசியைப் பதுக்கி வைத்திருந்த கோமதியைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
கோமதி மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் கவிதா ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளத்தூரில் உள்ள ‘சோலை ஆண்டவர் அரிசி ஆலைக்கு’ இந்த ரேஷன் அரிசி மூடைகள் அனுப்பப்படுவது தெரியவந்தது. அந்த ஆலையில் இந்த அரிசியைப் பட்டை தீட்டி மீண்டும் விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக, இந்த அரிசி ஆலை உரிமையாளர் செல்வி மீது ஏற்கனவே பள்ளத்தூர் காவல் நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வடநாட்டு இளைஞர்களைப் பயன்படுத்தி அருகில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியைக் கடத்தி வந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
